Thursday, April 2, 2009

இலங்கையில் போர் நிறுத்தமும், வணங்கா மண்ணும்


இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். அங்கே மக்கள் யுத்தத்தினால் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். தாய்மார்கள் சீரழிக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் காங்கிரஸ் தலைமைப்பீடமும், முக்கிய உறுப்பினர்களும், திடீர் ஞானோதயம் பெற்றவர் போல் குரல் கொடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு முழுவதுமே திரண்டெழுந்து இந்த அநிதிக்கு எதிராக ஆர்பரித்த போதெல்லாம், கண்டு கொள்ளாதிருந்த காங்கிரஸ் தலைமைக்கு என்ன இந்தத் திடீர் பாசம் என எண்ணத் தோன்றுவது இயல்பு.

ஈழத் தமிழ் மக்கள் மீதான பரிவை இரண்டு தசாப்த காலமாக, நீறுபூத்த நெருப்பெனத் தங்கள் இதயங்களுக்குள் மறைத்து வைத்திருந்த தாய் தமிழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் தா.பாண்டியன் விடுத்த அழைப்பில் விழித்துக் கொண்டது. ஆர்பரித்தெழந்த மக்கள் உணர்வுகளை கண்டு அதிர்ந்து போன அரசியற் கட்சிகளெல்லாம் தாமும் ஆதரவுதான் என்பதில் அக்றைகொண்டன. இப்படியாகுமா என எண்ணியிருந்த சிலருக்கு இது பெரும் இடியாகவே இருந்தது. குறிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காறருக்கு இதுவரை காலமும் தாம் கட்டிவைத்த கட்டுக் குலைந்து போனதாகவே தோன்றியது. ஆனாலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தாமும் உள்ளதாகவே காட்டிக் கொண்டனர். தமிழக முதல்வர் முடிந்தவரைக்கும் அறிக்கைப் போராட்டங்களை நடத்திக் காங்கிரசின் கைப்பிள்ளையாக நடந்து கொண்டார்.

இந்த நேரத்தில்தான் முத்துக்குமரன், ஈழத்தமிழர்களுக்காய் தியாக வேள்வி வளர்த்தான். அரசியல்பாணி ஆர்ப்பாட்டங்களில் ஓடிக்கொண்டிருந்த கட்சிகளும். கட்சிப் பிரமுகர்களும் ஒரு கணம் ஆடிப்போயினர். அடுத்தடுத்து நடந்த சம்பவங்களில் மக்கள் தங்கள் உள உணர்வின் வெளிப்பாட்டில் வேஷங்கட்டிக் கோஷம் போட்டவர்களுக்கு எதிர்பினைக் காட்டினார்கள். ஆனாலும் அரசியலில் பழந்தின்று கொட்டைபோட்ட அரசியற்தலைவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் அசந்து விடுவார்களா? தேர்தல் வரட்டும் தேற்றிவிடலாம் என கூட்டிக் கழித்துக் கணக்குப் போட்டனர்.

ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு என்பது தமிழக மக்களின் மனஉணர்வாக இருந்தாலும், தேர்தல் என்று வரும் போது மக்கள் தேடிக் கொள்ளும் பிரச்சனைகள் வேறாகத்தான் இருக்கும் என்பதே அரசில்வாதிகளதும், அரசியற்துறை ஆய்வாளர்களதும் கணிப்பாக இருந்தது. ஆனால் அந்த நிலையில் சற்ற மாற்றம் தெரிவது போலவும், அந்த மாற்றத்திற்கு அரசியலில் நிலை கொள்ளாதிருந்த சிலர் பேச்சுக்கள் காரணமாக இருப்தையும் கண்டு கொண்டதும், சீமான் ,கொளத்தூர் மணி, உட்டபட்ட சில பேச்சாளர்களை தேர்தல் முடியும் வரை வெளியே வராதவாறு சிறையில் தள்ளியது தமிழக அரசு. அதன் பிறகு அடங்கிப் போகும் ஈழ உணர்வு என்று எண்ணியதுபோலும். ஆனால் தமிழக மக்களின் மனங்களில் முத்துக்குமரன் முதலான தியாகிகளினால் மூட்டப்பட்ட தீ கனன்று கொண்டேயிருக்கிறது. சீமான் போன்றொர் சிறைப்பிடிக்கப்பட வேண்டுமென அதுவரையில் ஆர்பரித்த அதிமுக தலைவி கூட ஈழத்தமிழர்களுக்காக எழுந்திருக்கும் ஆதரவு கண்டு, அடையாள உண்ணாவிரதமிருந்தார்.
தொடர்ந்து வாசிக்கவும், வீடியோவைக் காணவும்

No comments: